மனநலம் பாதித்த பெண்ணிற்கு வாழ்க்கை: காவல் நிலையம் வரை சென்ற மாப்பிள்ளை

தாலி கட்டும் நேரத்தில் உறவினர்கள் திருமணத்தை நிறுத்தியும், சிறிய அளவில் மனநலம் பாதித்த பெண்ணிற்கு வாழ்க்கை கொடுப்பதற்காக காவல் நிலையம் வரை சென்ற மாப்பிள்ளையின் செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றது.

வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் திப்பாசமுத்திரத்தை சேர்ந்த ரவி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரோஜா பிரியா என்பவருக்கும் வீட்டு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற இருந்தது. தாலி கட்டும் நேரத்தில் திடீரென மாப்பிள்ளை வீட்டார் கல்யாணம் வேண்டாம் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தனக்கு இந்த கல்யாணத்தில் முழு விருப்பம் இருப்பதாகவும், உறவினர்கள் தான் திருமணத்தை தடுத்து நிறுத்துவதாகவும் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் மாப்பிள்ளை பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். ரோஜாபிரியா சிறிய அளவில் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் இரண்டு வீட்டாருக்கும் தெரிந்து தான் இதற்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த திருமணத்தில் மாப்பிளை ரவிக்கு முழு விருப்பம் இருப்பதால் அவரை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என காவல்துறையினர் உறவினர்களை எச்சரித்தனர். மேலும் ரோஜாபிரியாவை பதிவு திருமணம் செய்வதாக ரவி கூறியுள்ளார். சிறிய அளவில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க நினைக்கும் ரவியின் செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றது.

Exit mobile version