இந்திய வரலாற்றின் ஒப்பற்ற நாயகன், வரலாற்றின் அழியா சரித்திரம் ‘நேதாஜி’ சுபாஷ் சந்திர போசின் நினைவு தினம் இன்று.
இந்திய சுதந்திர போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி 1897- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ம் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக்கில், ஜானகிநாத் போசுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக பிறந்தார்.
லண்டன் சென்று ஐ.சி.எஸ் படித்த நேதாஜி, இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான ஐ.சி.எஸ் தேர்வில், இந்திய அளவிலேயே நான்காம் இடம்பெற்று தேர்ச்சியடைந்தார். மிகப்பெரிய பதவி.. சர்க்கார் உத்தியோகம்… ஆனால் அவையெல்லாம் ஆங்கிலேயர் முன் அவரை மண்டியிடச் செய்யவில்லை. தேர்ச்சி பெற்ற உடனேயே தனது ராஜினாமா கடிதத்தை மான்டேகு பிரபுவிடம் அளித்தார் சுபாஷ் சந்திரபோஸ்.
1938 -ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார். காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து விளகினார். 1940 ம் ஆண்டு ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்களை திரட்டுகிறார் என்று வீட்டுச் சிறையில் வைக்கபட்ட நேதாஜியின் பெயர், உலக அளவில் பரவியது. இதைத் தொடர்ந்து, ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவிய நேதாஜி, தரை வழியாகவே பயணம் செய்து, ஆப்கான் வழியாக ஜெர்மனியை அடைந்த நிகழ்வைப் பார்த்து உலகமே வியந்தது.
ஜெர்மனியில் ஹிட்லரை சந்தித்த சுபாஷ், இந்திய சுதந்திரத்திற்காக ஜெர்மனின் உதவியை நாடினார். ஆனால் ஹிட்லரோ, இந்தியர்களை காட்டுமிராண்டிகள் என்று குறிப்பிட்டார். அதை எதிர்த்துப் பேசிய போஸ், யாரும் எங்களுக்கு அரசியல் கற்று தர வேண்டிய அவசியம் இல்லை என்று முழங்கினார். சர்வாதிகாரி ஹிட்லரின் முன், முதல்முறையாக அப்படி ஒருவர் பேசியதை பார்த்து வியந்து போயினர் ஹிட்லரின் உதவியாளர்கள்.
பின்னர், ‘சுதந்திர இந்தியா மையம்’ என்ற அமைப்பை தொடங்கிய நேதாஜி, சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலை போராட்டத்தை மையப்படுத்தியும், உலகப்போர் பற்றிய செய்திகளையும் அதில் ஒலிபரப்பினார்.
1943-ம் ஆண்டு, சுதந்திர இந்திய அரசாங்கத்தை சிங்கப்பூரில் அமைத்தார். பிரதமர் பதவியையும், பிரதம ராணுவத் தளபதி பொறுப்பையும் அவர் ஏற்றார். பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப் பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். இந்திய தேசிய ராணுவத்தில், 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். மேஜர் லட்சுமி தலைமையில் இருந்த பெண்கள் ராணுவம், ஜான்சி ராணிப் படை என்ற பெயரில் இயங்கியது .இதில் ஆயிரத்து 200 பெண்கள் இருந்தனர்.
ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல் வழியாக சுமார் மூன்று மாதம் பயணம் செய்து டோக்கியோவை அடைந்தார். எங்கு பார்த்தாலும் விமானங்கள் குண்டுகள் வீசி வந்த இரண்டாம் உலகப் போர் சமயத்தில், இப்படி மூன்று மாத காலம் உயிரை துச்சமாய் மதித்து அவர் செய்த இப்பயணம், உலக வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றது.
1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி, அவர் இறந்துவிட்டார் என்று ஜப்பானிய வானொலி அறிவித்தது. இது இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவரது மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.
இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து, இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்ததோடு, மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தையே கதிகலங்க வைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புகழ், இன்றளவும் நிலைத்திருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை…