கானல் நீராகும் வைகோவின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி

மக்களவைத் தேர்தலில் திமுகவும், மதிமுகவும் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் படி வைகோவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க திமுக தயாராக உள்ள போதும், வைகோ-வால் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

மதிமுக தலைவர் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க திமுக தயாராக இருந்தாலும், அந்த பதவிக்கு போட்டியிட முடியாத நிலையில் வைகோ இருப்பதற்கும் திமுகதான் காரணம் என்பது சற்று வினோதமானது. 2009ல் ஆண்டு திமுக ஆட்சியில் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாகவும், விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் காட்டமாக இருந்த வைகோ, அப்போது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசையும், மாநிலத்தில் ஆட்சியில் இருந்த திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து “நான் குற்றம் சாட்டுகிறேன்”என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார்.

நூல் வெளியீட்டு விழாவில், இந்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததாக கருத்து கூறிய வைகோ மீது தேச துரோகம், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்த, இந்த வழக்கானது சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்து வரும் 5ம் தேதி தீர்ப்பும் வழங்கப்பட உள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை விதிக்கப்பட்டோர் தண்டனை காலம் மற்றும் அதற்கு மேலாக 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதி உள்ள நிலையில், தற்போது வைகோவுக்கு இந்த வழக்கின் தீர்ப்பு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேச துரோக வழக்கை பொறுத்தவரை குறைந்தது மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படுவதற்கு சட்டத்தில் இடம் உள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணையின் போது வைகோ தன் மீதான குற்றச்சாட்டை மறுக்க வில்லை என்பதால் தண்டனைக்கான வாய்ப்பு மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 15 வருடங்களாக எந்த ஒரு பதவியும் இல்லாமல் விரக்தியாக இருந்த வைகோவுக்கு, தற்போது ராஜ்யசபா உறுப்பினர் பதவி அவருக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் என அவரது கட்சியினர் கனவு கண்டு கொண்டிருந்த நிலையில், அதுவும் கானல் நீராக மாறும் சூழல் உருவாகியுள்ளது…

Exit mobile version