மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை ஒன்றை 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்ட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மேகதாது அணைக்கான கர்நாடக அரசின் வரைவுத் திட்டத்தினை தயாரிக்கும்படி மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து இருப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு அனுமதி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வரைவுத் திட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் தமிழக அரசு சார்பில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.