ஆண்டிகுவா பிரதமரால் மெகுல் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டதால் விரைவில் அவர் நாடு கடத்தப்படுவார் என தெரிகிறது.
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் அவருடைய உறவினர் மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, இருவரும் இந்தியாவை விட்டு வெளியேறினர்.
வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை அவர்கள் மேல் வழக்கு பதிந்து மும்பை நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் மெகுல் சோக்சி ஆண்டிகுவாவில் அந்நாட்டு குடியுரிமை பெற்று பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
இதனையடுத்து ஆண்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுன் மெகுல் சோக்சியின் குடியுரிமையை ரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே விரைவில் அவர் நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.