மருத்துவ கல்வி முதலாமாண்டு மாணவர்கள் தேர்வு காலதாமதமாக 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தமிழகத்தை சேர்ந்த சிலர் மோசடியில் ஈடுபட்டதை அடுத்து, தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் ஒரு சுற்றறிக்கை அனுப்பினர். அதில் நடப்பு மருத்துவ கல்வி ஆண்டில் படிக்கும் முதலாமாண்டு மாணவர்களின் அனைத்து சான்றிதழ்களையும் மீண்டும் ஒருமுறை சரிபார்க்க வேண்டும் எனவும் அதனை சரிபார்த்த பின்பு சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், வகுப்புகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுவதோடு தேர்வுகள் நடத்துவதிலும், காலதாமதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற வேண்டிய தேர்வுகள் காலதாமதமாக ஜனவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.