சாலை விபத்துகளை 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை: தமிழக அரசு

சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களை 50 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்புறம் அமர்ந்து பயணிப்பவர் இருவரும் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க கோரியும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க கோரியும், கே.கே ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக, போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், தமிழகம் முழுவதும் கடந்த 2018 ம் ஆண்டு நவம்பர் முதல் 2019 நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில்  தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 68 லட்சத்து 76 ஆயிரத்து 452 பேர்  மீதும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 2 லட்சத்து 7 ஆயிரத்து 291 பேர் மீதும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகள் முழுமையாக பின்பற்றபட்டு வருவதால், சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் 38 சதவீதம் குறைந்துள்ளதாகவும், அதனை இந்தாண்டு 50 சதவீதமாக குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version