அமொிக்காவின் வடகிழக்கு மாகாணத்தில் வெர்மாண்ட்டில் உள்ள நகரம் பேர் ஹெவன். கிட்டத்தட்ட 2300 பேர் வாழ்ந்து வரும் இந்த நகரத்தில் ஒவ்வொரு வருடமும் மேயர் தேர்தல் நடைபெறும். இதில் விசித்திரம் என்னவென்றால் இங்கு மேயர் தேர்தலில் நிற்பவர்கள் மனிதர்கள் அல்ல விலங்குகள். அதன்படி இந்த ஆண்டுக்கான மேயருக்கான சிறப்பு தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் லிங்கன் என்ற நுபியன் ஆடும், சாம்மி என்ற நாயும் போட்டியிட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில் வெறும் 3 வாக்குகள் வித்தியாசத்தில் சாம்மி நாயை தோற்கடித்து லிங்கன் ஆடு வெற்றி பெற்றது.
இந்த தேர்தல் குறித்து பேர் ஹெவன் நகர மேலாளர் கூறுகையில், நிதி திரட்டுவதற்காகத்தான் இந்த தேர்தல் நடத்தப்பட்டது என்றும், இது இந்த நகரத்திலுள்ள சிறுவர்களுக்கு நல்ல பாடமாக அமைந்து விட்டது என்றும் கூறினார். மேலும் தான் இந்த பகுதிக்கு புதியவன் என்பதால் எனது செயலை இங்குள்ள மக்கள் வித்தியாசமாக பார்ப்பார்கள் என்று எண்ணினேன். எதிர்பார்த்தபடியே இந்த தேர்தலுக்கு மக்களிடையே நல்ல பலன் கிடைத்தது. ஏராளமானோர் தங்களது வளா்ப்பு பிராணிகளுடன் வந்து கலந்து கொண்டனர். பேர் ஹெவன்நகரத்தில் ஒரு மேயர் பதவிக்காலம் 1 ஆண்டு என்பதால் எனவே அடுத்த ஒரு வருடத்திற்கு ஆடு தான் மேயராக பதவி வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.