தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவானது. புதிய மாவட்டத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் லலிதா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பாரதி, அதிமுக மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.