தொழிலாளர்களின் போராட்டத்தால் விளைந்த மே தினம்

உலகம் முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர் தினம் உருவான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு…..

1830ல் பிரான்சின் நெசவுத் தொழிலாளர்களுக்கு ஒரு ஷிப்ட் என்பது 15 மணி நேரங்களாக இருந்தது. இதனை எதிர்த்து அவர்கள் 1834ல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற முழக்கத்தை முன்வைத்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது வெற்றிபெறவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.

இந்த இயக்கம் நாளுக்கு 8 மணி நேரமே வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து மே 1, 1886ல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. மூன்றரை லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலைநிறுத்தத்தால் அமெரிக்காவே முடங்கியது. இதன்தொடர்ச்சியாக மே 3, 1886 அன்று மெக்கார்மிக் ஹார்வஸ்டிங் மெஷின் என்ற நிறுவனத்தின் வாசலில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். கலவரம் தொடர்பான வழக்கில் 1887, நவம்பர் 11, தொழிலாளர் தலைவர்கள் 7 பேர் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிடப்பட்டவர்களுக்காக நவம்பர் 13ல் நடந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு, கருப்பு தினமாக அனுசரித்தனர். இதன்பின்னரே தொழிலாளர்களின் வலிமை அரசுக்குப் புரிந்தது. இதையடுத்து, இத்தனைப் போராட்டங்களும் தொடங்கிய மே 1ஆம் தேதி அமெரிக்காவில் தொழிலாளர் தினமாக ஏற்கப்பட்டது. பின்னர் 1890ஆம் ஆண்டு முதல் பல்வேறு உலக நாடுகளும் இந்நாளை ஏற்றுக் கொண்டன.

இந்தியாவில் தொழிலாளர் தினம் முதன்முதலில் சென்னை மாநகரில்தான் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதி சிங்காரவேலர் 1923ஆம் ஆண்டு மே 1ல் சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள மெரினா கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார். இதன் நினைவாக சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை 1959ஆம் ஆண்டில் திறக்கப்பட்டு, இன்றும் உழைப்பாளர்களின் பெருமையை பறைசாற்றிக் கொண்டுள்ளது.

 

Exit mobile version