மே 9 – உலக அன்னையர் தினம்…

அம்மா என்றாலே அன்பும், பாசமும் தான் நினைவுக்கு வரும். கருணையின் வடிவான அன்னையை உலகமே போற்றும் அன்னையர் தினத்தை குறித்து தற்போது காணலாம்…

`அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!’ என்றும் `தாயிற் சிறந்த கோயிலுமில்லை, என்றும் ஔவையார் தம் கொன்றை வேந்தன் நூலில் அன்னையை முதன்மையாகக் சுட்டிக் காட்டியுள்ளார். ‘மாதா பிதா குரு தெய்வம்’ என சான்றோர்களும், மாதாவையே முதன்மைப்படுத்தியுள்ளனர். காரணம், கலப்படம் இல்லாத அன்பு ஒன்று கிடைக்கிறது என்றால் அது அன்னையிடம் இருந்து தான்.

1908ஆம் ஆண்டு முதல் உலக அன்னையர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்னைகளுக்காக அரும்பாடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா ஜார்விஸ், தனது அன்னையைப் பாராட்டி, சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண்மணி ஆவார். தங்களது தாய் உயிரோடு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் கெளரவிக்க வேண்டும் என ஜார்விஸ் விரும்பியதே, அன்னயைர் தினமான உருவானது.

அன்னையின் சிறப்பைக் கூறவும், அவளைப் போற்றவும் ஒரு நாள் போதாது. பெரும்பாலான இளைஞர்களும் சரி, இளம்பெண்களும் சரி மனம் விட்டு பேசுவது அம்மாவிடம் மட்டுமே. பிரச்னைகளுக்கு தீர்வு அம்மாவிடம் கிடைக்கும் என்பதே அவர்களின் நம்பிக்கை.

ஒன்பது மாதங்கள் கருவைச் சுமந்து பத்தாவது மாதம் குழந்தைபேறின் போது எடுக்கும் மறுஜென்மத்தை, அவளது கணவனால் கூட பார்க்க முடியாது. பிரசவம் என்பது பெண்ணுக்கு தாங்க முடியாத வலியை கொடுக்கும் என்றாலும் அவை அனைத்தையும் தாங்கி கொண்டு குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் கிடைக்கும் அபரிவிதமான சந்தோஷத்தினால், அதை மறந்து விடுகிறாள்.

கருவை சுமப்பது முதல், தனது மகனோ மகளோ திருமணம் ஆகி வேறு இடத்திற்கு சென்றாலும், தாயின் எண்ணங்கள் முழுவதும் தன் பிள்ளைகளைத் தொடர்ந்தே இருக்கும்.

அன்னையர் தினத்தன்று வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி கடந்து விடாமல், குடும்பத்தின் ஆணி வேரே அன்பான அன்னை தான் என்பதை உணர்ந்து போற்றுவதே, அவளுக்கு நாம் தரும் சிறந்த அன்னையர் தின பரிசாகும்.

அனைவருக்கும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!

Exit mobile version