உலக அளவில் மிக அதிக திரைப்படங்கள் தயாரிக்கப்படும் நாடாக இப்போது இந்தியாதான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கான படங்கள் இங்கு திரைக்கு வருகின்றன. அப்படிப்பட்ட இந்தியாவின் முதல் மவுனப் படமான ’ராஜா ஹரிச்சந்திரா’வை தாதா சாகேப் பால்கே முதன்முதலாகத் திரையிட்ட நாள் இன்று. அது குறித்துப் பார்ப்போம்…
இளவயதில் தனது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தாதா சாகேப் பால்கே, இயேசுவின் வாழ்க்கையை விளக்கும் ‘தி லைஃப் ஆஃப் கிரைஸ்டு’ – என்ற மவுனப்படத்தைப் பார்த்தார். அதுபோல ஏன் இந்திய புராணங்களைப் படமாக எடுக்கக் கூடாது? – என்ற எண்ணம் அவருக்குள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அதன் பின்னரே அவர் திரைப்படத் தயாரிப்புக்குள் நுழைந்தார்.
நீண்டகால முயற்சிக்குப் பிறகு, இந்திய புராண நாயகனான ‘ஹரிச்சந்திர மகாராஜா’வின் கதையை, ‘ராஜா ஹரிச்சந்திரா’ – என்ற பெயரில் தாதா சாகேப் பால்கே படமாக எடுத்தார். அந்தப்படம் 1913, மே 3ஆம் தேதி நாடெங்கும் திரையிடப்பட்டது. தமிழகத்தில் கூட சென்னையிலும் கோவையிலும் இப்படம் திரையிடப்பட்டது.
திரைப்படம் என்றால் என்னவென்றே தெரியாத மக்களுக்கு தனது படத்தை,‘57 ஆயிரம் புகைப்படங்கள்… 2 மைல் நீளத்துக்கு இருக்கும்… பார்க்கக் கட்டணம் 3 அணா’ – என்று விளம்பரப்படுத்தினார் தாதா சாகேப் பால்கே. அந்த விளம்பரம் மக்களை ஈர்த்தது.
1913ல் ராஜா ஹரிச்சந்திரா படம் பெற்ற வெற்றியே, பின்னர் இந்தியத் திரைப்படத்துறை பல பெரிய வளர்ச்சிகளைப் பெறக் காரணமாக இருந்தது. தாதா சாகேப் பால்கேவுக்கு ‘இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை’ என்ற பெயரையும் இந்தத் திரைப்பட வெளியீடே பெற்றுத் தந்தது.