தமிழகம் முழுவதும் மாட்டு பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவனின் நண்பனாக இருக்கும், இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளான மாட்டுப்பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பசுக்களை கடவுளின் மறு அவதாரமாக கருதுவதால் அவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கலிட்டு மாடுகளுக்கு படைத்து பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி அதிகாலையில் மாடுகளை குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு வர்ணம் பூசி , குங்கும பொட்டால் திலகமிட்டு மாடுகளுக்கு பூஜை செய்தனர். விளைந்த பயிர், காய்கறிகளுடன் பொங்கல் செய்து மாடுகளுக்கு படைத்து வழிபட்டனர்.
இந்நிலையில் மாட்டு பொங்கலையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ அறம்வளர்நாயகி சமேத ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோவிலில் நந்தி பெருமாளுக்கு பிரத்யேக பூஜைகள் செய்து, சாமி ஊர்வலமும் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.