சிவகாசியில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கிய நிலையில், ஏராளமானோர் திரண்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
சிவகாசி நகராட்சி அலுவலகத்தில், சுகாதாரத்துறை சார்பாக, 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நகராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
நூற்றுக்கணக்கானோர் கூடிய நிலையில், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால், பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவர்களில் சிலர், கூட்டத்தை கண்டு திரும்பிச் சென்றனர்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்ககான தடுப்பூசி 20 ஆயிரம் டோஸ்கள் மட்டுமே சிவகாசிக்கு வழங்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் விரைந்து செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டும் நிலையில், பொதுமக்கள் காத்திருக்கும் நிலையை ஏற்படுத்த கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில், 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
கரூர் கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதியில், 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் என அனைத்து வயதினரும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இங்கு, முறையான பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக, மர நிழலில் கூட்டமாக காத்திருந்தும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இதனை அதிகாரிகள் கண்டும் காணாமல் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டது, வருத்தம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறினர்.