கொரோனா தடுப்பூசி மையங்களில் தள்ளுமுள்ளு!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த வெப்படையில், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதனையடுத்து நூற்றுக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். இதனால், பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்க முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் திரண்ட நிலையில், ஐம்பது பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வெப்படை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அரசு மெத்தனம் காட்டுவதாக வந்திருந்தவர்கள் புலம்பிச் சென்றனர்.

அதேபோல, நாமக்கல் நகர் பகுதியில் ஒரே இடத்தில் மட்டுமே கொரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளதால், மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். மக்கள் கடும் வெயிலில் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து, தடுப்பூசி செலுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், சுகாதாரத்துறையின் அலட்சியப்போக்கு மிகுந்த கவலையை தருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

உதகையில் கொரோனா தடுப்பூசி செலுத்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருந்த நிலையில், தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். அரசு மருத்துவமனையில் 80 டோக்கன்களும், தனியார் பள்ளி மையத்தில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டன. தடுப்பூசி நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் தெளிவான விவரங்களை அளித்தால், மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை இருக்காது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

நீலகிரி மாவட்டம் கூடலூரில், தடுப்பூசி செலுத்த கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டு பொதுமக்கள் கூடினர். தடுப்பூசி தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில், ஒரே நேரத்தில் மக்கள் முண்டியடித்ததால், நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

Exit mobile version