மசூத் அசார், சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது, பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த சம்மட்டி அடி என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அதில் தீவிரவாத சம்பவங்களுக்கு நிதி வழங்கி, தீவிரவாத சம்பவங்களை நிகழ்த்தும் மசூத்அசார், சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது, பாகிஸ்தானின் வெளியுறவுக்கொள்கைக்கு கிடைத்த சம்மட்டி அடி எனவும், பாகிஸ்தானால் மசூத் அசார் மீதான அறிவிப்பை வரவேற்கவோ அல்லது விமர்சிக்கவோ முடியாது எனவும் விமர்சித்தார்.
மேலும், இந்திய அரசு மசூத் அசார் விவகாரத்தில் ஐ.நா.சபையின் பாதுகாப்பு குழுவின் முடிவை வரவேற்கிறது என்றும், ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் தீவிரவாத சம்பவங்கள் குறித்தும் தொடர்ந்து விவாதித்தது என்றும் தெரிவித்தார். இத்தகைய நடவடிக்கைகளால், மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டும், அவர் வேறு எங்கும் பயணம் செய்யாமல் இருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முடிவு எடுக்க இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள், புல்வாமா தாக்குதலை மையப்படுத்தி, தொடர்ந்து வலியுறுத்தியதால், 4 முறை மறுப்புத் தெரிவித்த சீனா இத்தீர்மானத்துக்கு ஆட்சபனை தெரிவிக்கைவில்லை என்றும் கூறினார்.