டெல்லியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில், பிரபல குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், தனக்கு சவால் விடுத்த சக வீராங்கனை நிகாத் ஜரீனை வென்று, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதில் மகளிர் குத்துச்சண்டைக்கான தகுதி சுற்று சீனாவில் நடைபெறுகிறது. இதில் 51 கிலோ, 57 கிலோ, 60 கிலோ என பல்வேறு எடைப்பிரிவுகளில் போட்டிகளில் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய குத்துச்சண்டை சங்க தலைவரான அஜய் சிங், சீனாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றில் மேரி கோம் நேரடியாகப் பங்கேற்பார் என வெளிப்படையாக அறிவித்தார். சர்வதேச போட்டிகளில் மேரிகோமின் தொடர்ச்சியான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அஜய் சிங் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மற்றொரு சர்வதேச குத்துச் சண்டை வீராங்கனையான நிகாத் ஜரீன் தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும் எனவும் தன்னுடன் மோதி வெற்றி பெற்று மேரிகோம் இறுதிச் சுற்றுக்கு செல்லட்டும் என சவால் விட்டதுடன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கும், இந்திய குத்துச்சண்டை சங்கத்துக்கும் கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து தனது முடிவை மாற்றிக் கொண்ட இந்திய குத்துச்சண்டை சங்கம் 51 கிலோ எடைப் பிரிவிலும் தகுதி சுற்று ஆட்டத்தை நடத்த முடிவு செய்தது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில் 36 வயதான மேரி கோம் 23 வயதான நிகாத் ஜரீனை எதிர்கொண்டார். போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய மேரி கோம் இறுதியில் 9-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற பின் நிகாத் ஜெரினுக்கு கைகொடுக்காமால் கீழே இறங்கினார். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மற்றவர்களை மதிப்பவர்களுக்கு தான் மரியாதை தருவேன் என்றும் மற்றவரை மதிக்க கற்றுத் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் விளையாட மேரி கேம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீனாவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பார்.