விடுதலைப்போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் 220 வது நினைவு தினத்தையொட்டி, அதிமுக சார்பில் மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மருதுபாண்டியர் நினைவு நாளையொட்டி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் ”மருது சகோதர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விடுதலைக்காக, வெள்ளையர்களை வெளியேற்ற அனைவரையும் ஒன்றுதிரட்டி முதல் போர்ப் பிரகடனம் அறிவித்த மருது சகோதரர்களின் வீரம், தியாகம், புகழ், என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி, நெஞ்சுரம் கொண்டு போரிட்டு, பீரங்கிபோல் முழங்கி, இம்மண்ணின் விடுதலைக்காய் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வீரத்தமிழர்களான மருது சகோதரர்களின் நினைவு நாளில் அவர்களின் வீரத்தையும், தியாகங்களையும் போற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ஓ.எஸ். மணியன், ஆர். காமராஜ், ஜி.பாஸ்கரன், கோகுல இந்திரா, ஆகியோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் உத்தரவின்படி மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதாகக் கூறினார்.