பூமிக்கு அருகில் வரும் செவ்வாய் கிரகம் – வெறும் கண்ணால் பார்க்கலாமா?

செவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு அருகில் வரும் நிகழ்வை இரவு முழுவதும் வெறும் கண்களால் பார்க்கலாம் என பிர்லா கோளரங்க இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தின்போது, அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை இன்று அடைகிறது. அதாவது, பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 38 கோடி கி.மீ. ஆகும். இதில், இன்று பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது, இரண்டுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. ஆக இருக்கும். இந்த அரிய வானியல் நிகழ்வு இன்று ஏற்படுகிறது, இது போன்று பூமிக்கு அருகில் வரும் நிகழ்வு 26 மாதங்களுக்கு ஒரு முறை நிகழும், ஆனால் இந்த அளவிற்கு மிகவும் அருகாமையில் வரும் நிகழ்வு மீண்டும் 13 ஆண்டுகள் கழித்துத்தான் உருவாகும்.

அதே போல வருகிற 13 ந் தேதி செவ்வாய் கிரகமும், சூரியனும் ஒன்றுக்கொன்று எதிர்எதிரே காணப்படும், நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது, செவ்வாயும், சூரியனும் ஒரே நேர்கோட்டில் தெரியும்.

எந்த கிரகமும் சூரியனுக்கு நேர் எதிரில் வரும்போது, பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைவது இயல்புதான். அந்த வகையில், நாம் தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது, செவ்வாய் கிரகம் பெரிதாகவும், பிரகாசமாகவும், நெருக்கமாகவும் தெரியும். இந்த ஆண்டு இறுதிவரை வானில் செவ்வாய் கிரகத்தை காணலாம் எனவும் மிக பிரகாசமாக பார்க்க வேண்டுமானால், இம்மாத இறுதிவரை காணலாம். ஏனென்றால், நாட்கள் ஆக ஆக தூரம் அதிகரிப்பதால், பிரகாசமும், அளவும் குறையும்.

பொதுமக்கள் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு வெறும் கண்ணால் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம். சூரியன் மேற்கில் மறைந்தவுடன் கிழக்கு திசையில் இதனை பார்க்கலாம். காலை நேரத்தில், மேற்கு திசையில் பார்க்கலாம். ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமாக தெரியும் இந்த கோளை வெறும் கண்ணால் பார்க்கலாம் இன்று இரவு முழுவதும் காணலாம் என்றும், இதனால் கண்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது” என அவர் தெரிவித்தார்.

26 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி நிகழ்ந்தது. அப்போது 5 கோடியே 76 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் செவ்வாய் கிரகம் வந்து சென்றது, இதே போன்று மீண்டும் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் வரும் என சௌந்தரராஜ பெருமாள் கூறினார்.

Exit mobile version