நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட படத்தொகுப்பாளர் பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், தன்னிடம் இருந்து முறைப்படியாக விவாகரத்து பெறாமல், இரண்டாவதாக வனிதாவைத் திருமணம் செய்து கொண்ட பீட்டர் பால் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளார். இந்தச் சம்பவம் சமூகவலைத்தளங்களில் கடும் விவாதப் பொருளாக மாறி உள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பு…
நடிகை வனிதா விஜயகுமார் விலகினாலும், பரபரப்பு சர்ச்சைகள் அவரை விட்டு விலகுவதில்லை. கோலிவுட்டில் நடிகர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அப்போது முதல் அவர் கடைசியாகப் பங்கேற்ற பிக்-பாஸ் நிகழ்ச்சி வரை அவரைச் சர்ச்சைகள் சூழ்ந்து கொண்டே இருந்தன. அவை எல்லாவற்றிலும் இருந்து விலகி, அமைதியான வாழ்க்கைக்குத் திரும்ப விரும்பிய வனிதா, அவரது முதல் இரண்டு திருமணங்கள் தோல்வியில் முடிந்தநிலையில், மூன்றாவதாக படத்தொகுப்பாளர் பீட்டர்பாலை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
இந்தநிலையில், பீட்டர்பாலின் முதல் மனைவி, வனிதாவைச் சுற்றி பரபரப்பைப் பற்ற வைக்கும் விதமாக, காவல்துறையில் புகார் அளித்தார். அதில் எலிசபெத் ஹெலன், தனது கணவர் பீட்டர் பால், தன்னிடம் இருந்து முறையாக விவாகரத்து பெறாமல், நடிகை வனிதாவைத் திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பீட்டர் பால் ஒரு பெண் பித்தர் என்றும் குடிகாரர் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கொடுத்த புகார் குறித்து விளக்கமளித்த வனிதா விஜயகுமார், இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும், எலிசபெத் பணத்திற்காகவும், பரபரப்புக்காகவும் இப்படி ஒரு புகாரைக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகை லெட்சுமி ராமகிருஷ்ணன் அவரது ட்வீட்டரில், வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் குறித்து ஒரு கருத்தைப் பதிவு செய்தார். அதில், பீட்டர்பாலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும், இன்னும் அவருக்கு விவாகரத்தாகவில்லை என்றும், படிப்பும், அனுபவமும் கொண்டவர்கள் எப்படி இந்த தவறைச் செய்ய முடியும் என தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும், திருமணம் நடப்பதற்கு முன், பீட்டர் பாலின் முதல் மனைவி புகாரளித்து, ஏன் அந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்தவில்லை என்றும் அந்த ட்வீட்டர் பதிவில் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதோடு வனிதாவுக்கு அனுதாபம் காட்டும் விதத்தில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்வீட்டர் பதிவில், வனிதா கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டநிலையில், இந்த உறவாவது அவருக்கு நல்ல விதமாக அமையும் என்று நினைத்தேன் என்றும், ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது என்றும், அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தைப் பெண்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் எதுவும் மாறப்போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து,லெட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகை வனிதா, தம்பதிகளாக இருக்கும் இரண்டு பேர் ஏன் பிரிந்து சென்றார்கள் அல்லது விவாகரத்து செய்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டதுடன், நீங்கள் உங்களுக்கு தெரியாத ஒன்றில் எந்த வகையிலும் அக்கறை கொள்வது உங்களுடைய வேலை இல்லை என்றும், இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல. தாம் தெரிந்தோ தெரியாமலோ இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அதை எப்படி சரிப்படுத்துவது என்பது தமக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார். தங்களுடைய ஆலோசனை அல்லது உதவி தேவை இல்லை என்றும் காட்டமாக வனிதா குறிப்பிட்டுள்ளார்
வனிதாவின் பதில்களுக்கு பின்னர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பதிவில், வனிதா திருமணத்தை பற்றி பேசிக்கொள்வதை நிறுத்திக் கொள்வோமா? முறைப்படி விவாகரத்து் பெறாமல் நடைபெறும் மறுமணங்கள் குறித்த தமது கருத்தை பதிவிட்டதாக மற்றொரு பதிவை ட்வீட்டரில் பதிவு செய்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டது குறித்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாகவும், பல பதிவுகள் வெளியாகின. இந்நிலையில், பீட்டர்பாலின் முதல் மனைவி மற்றும் நடிகை லெட்சுமி ராமகிருஷ்ணனின் கருத்துக்களும், அதற்கு நடிகை வனிதா அளித்த பதில்களும் சமூகவலைத்தளங்களைப் பரபரப்பாக்கி உள்ளன.