விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாகவும் வங்கிக் கடன் பெற்று தருவதாகவும் கூறி, பல கோடி ரூபாயை சுருட்டிய மோசடி கும்பலை போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஜம்புலிபுத்தூரைச் சேர்ந்த சாரதா என்பவர், கூகுள் பிரவ்சரில், வேலை வாய்ப்பு உள்ளதா என தேடியபோது, அவருடைய எண்ணிற்கு வேலை வேண்டுமா இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என்ற குறுந்தகவல் வந்துள்ளது. அதனை நம்பி விவரங்கள் அனைத்தையும் அனுப்பி வைத்தார் வேலை இல்லா பட்டதாரியான சாரதா.
சாரதாவை தொடர்பு கொண்ட இளம்பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் ஒரு வேலை மட்டும் காலியாக இருப்பதாகவும் அதனை ஒதுக்கி வைத்துள்ளதாகவும் பேசி பதிவுக் கட்டணமாக 2550 ரூபாய் பெற்றுள்ளார். பின்னர் சாரதாவுக்கு போலி பணி நியமன ஆணை கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
ஏர்போர்ட்டில் வேலை வாங்கி விட்டதாக சிறகடித்து பறந்து கொண்டிருந்த சாரதாவுக்கு மீண்டும் செல்போனில் அழைப்பு வந்தது. மறு முனையில் அதே இளம்பெண். மருத்துவ பரிசோதனை கட்டணம், விசா கட்டணம் என கூறி அப்போது ஒரு பெருந்தொகைக்கு அடிபோட்டுள்ளார் அந்தப் பெண். விமானத்தில் வேலை என்ற சாரதாவின் கனவுக்கு அந்த கட்டணம் சாதாரணமாகவே தெரிந்ததால், கேட்ட தொகையை தயங்காமல் கணக்கில் செலுத்தினார்.
4 நாட்களுக்குள் மீண்டும் அதே இளம்பெண் தொடர்புகொண்டு ஏதோ சொல்லி பணம் கேட்க அதையும் சிரத்தையாக அனுப்பி வைத்தார் சாரதா. இப்படி பல கட்டங்களாக அவர் பறிகொடுத்த பணத்தை கணக்கிட்டு பார்த்தால் அது 16 லட்சத்தை நெருங்கியது. கடந்த சில நாட்களாக இளம்பெண்ணிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. இவர் அழைத்தால் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
சாராதாவிற்கு மிக மிக தாமதமாக சந்தேகம் வந்ததையடுத்து, போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் டெல்லி சென்ற குழு, இந்த விவகாரம் தொடர்பாக விஜய் ராமச்சந்திரன், கோவிந்த் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் 31 மொபைல் போன்கள், லேப்டாப்கள், கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், மற்றும் 46 ஏடிஎம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் அவர்கள் மூவரும் நாமக்கல்லை சேர்ந்தவர்கள் என்றும் வேலை மற்றும் கடன் வாங்கி தருவதாகவும் கூறி, தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
நான்கு வரிகளில் வரும் குறுஞ்செய்தியை நம்பி பலர் தன் சேமிப்பு மொத்தத்தையும் தொலைத்து நிற்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.