அரக்கோணம் அடுத்த பனப்பாக்கத்தில் மார்கழி முதல் தேதியை முன்னிட்டு பாரம்பரியத்தை போற்றும் வகையில் மார்கழி மகா உற்சவம் நடைபெற்றது.
மார்கழி மாதம் என்றாலே ஆண்டாள் திருவடிகளைப் பணிந்து பஜனை பாடியும், ஆடியும் கொண்டாடுவது நம் பாரம்பரிய வழக்கம். அந்த வழக்கத்தை தற்கால தலைமுறையினர் மறந்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில், மார்கழி மகா உற்சவம் நடைபெற்றது. இதற்காக 20 பஜனை குழுவினர் மற்றும் 200 உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இந்த மார்கழி மகா உற்சவத்தை கொண்டாடினர். இவர்கள் அதிகாலை 3 மணி அளவில் இருந்து பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள தெருக்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக வீதி உலா வந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி பஜனை செய்தனர். இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.