12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், கடந்த 2-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 35 ஆயிரம் பேர் எழுதி வருகின்றனர்.
மார்ச் 24-ம் தேதி வரை நடைபெறும் இத்தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் பணி ஏப்ரல் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இப்பணிகள் நிறைவடைந்ததும், மதிப்பெண் பட்டியல் அடங்கிய குறுந்தகடை தேர்வுத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.