சட்டவிரோத பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்களின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2004, 2007ல் மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதிமாறன் பதவி வகித்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு பி.எஸ்.என்.எல்லின் அதிவிரைவு தொலைபேசியின் 700க்கும் மேற்பட்ட இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால், அரசுக்கு 1 கோடியே 78 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய புலனாய்வு துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஜனவரி மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அப்போது தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் நேரில் ஆஜராகினர். கலாநிதி மாறன் தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, குற்ற சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல், நம்பிக்கை மோசடி, ஊழல் முறைகேடு ஆகிய பிரிவின் கீழ் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது.
இந்தநிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்ற கலாநிதி மாறன், தயாநிதி மாறனின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தநிலையில், இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தநிலையில், மாறன் சகோதரர்களின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தள்ளுபடி செய்தார். வழக்கை நான்கு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என சி.பி.ஐ நீதிமன்றத்திற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.