மரக்காணம் ஒன்றிய தலைவர் பதவிக்காக திமுக அமைச்சர் மஸ்தான், பொன்முடி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால் மரக்காணத்தில் பதற்றம் நிலவியது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற 26 கவுன்சிலருக்கான தேர்தலில், திமுக 17 இடங்களையும், அதிமுக 3 இடங்களையும் கைப்பற்றியது. கடந்த மாதம் 22ம் தேதி மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதில் மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை கைப்பற்றுவதில், அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர் நல்லூர் கண்ணணுக்கும், அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளரான தயாளன் என்பவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவியதால் மறைமுக தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பொன்முடியின் ஆதரவாளர் நல்லூர் கண்ணன் மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை உடனே நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து மறைமுக தேர்தலில் வாக்களிக்க வரும் கவுன்சிலர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், மறைமுக தேர்தலை முழுவதுமாக சிசிடிவி கேமிராக்களைக் கொண்டு பதிவு செய்ய வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளை விதித்து நவம்பர் மாதம் 22ம் தேதி மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. நல்லூர் கண்ணன் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், பொன்முடியின் மற்றொரு ஆதரவாளரான அர்ஜுனன், அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளரான தயாளனை எதிர்த்து போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின்போது அதிகார துஷ்பிரயோகம் அராஜகம் நடந்துள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.
தனக்கு கூடுதல் வாக்கு கிடைத்த நிலையிலும், அமைச்சர் செஞ்சிமஸ்தான் போன் செய்து சொன்னதால் தயாளன் வெற்றி பெற்றதாக கூறப்பட்டதாக பொன்முடி ஆதரவாளரான அர்ஜுனன் புகார் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலை எதிர்த்து சென்னை உச்சநீதிமன்றம் செல்ல தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே தயாளனின் வெற்றி எதிர்த்து அர்ஜுனனின் ஆதரவாளர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜனநாயகம் காப்போம் என்று மேடைக்கு மேடை உதார்விடும் திமுகவில், அமைச்சர்களுக்கு இடையே நிலவும் ஈகோ மோதலில் உட்கட்சி ஜனநாயகம் சாலையில் மறியலாக சந்தி சிரிக்கிறது.