தனித்தமிழ் இயக்கத்துக்கு பெரிதும் வித்திட்ட மறைமலை அடிகளின் பிறந்த தினம் இன்று.
உயர்தனிச் செம்மொழி என்ற உன்னத அமிழ்துக்கு உயிரூட்ட வந்தவர் மறைமலை அடிகள். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றத்தில், ஜூலை 15ம் தேதி, 1876ம் ஆண்டு பிறந்தார். இயற்பெயர் வேதாசலம் என்பதை தனித்தமிழ்க் காதலால் மறைமலை என்று மாற்றிக்கொண்டார்.
சென்னை கிறித்துவக் கல்லூரியில், பரிதிமாற்கலைஞர் என்னும் தனித்தமிழ்ச் சூரியனுடன் சேர்ந்து தனித்தமிழ் சிந்தனைகளுக்கு உரமூட்டினார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு வித்திட்டதும் மறைமலை அடிகளே. சைவ சித்தாந்தம் தழைக்க, ’சைவ சித்தாந்த மகா சமாஜ்’ தொடங்கி, பல மாநாடுகளை நடத்தினார்.
ராமலிங்க அடிகளாரின் கொள்கையைப் பின்பற்றி பல்லாவரத்தில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தொடங்கி, அதையும் தனித்தமிழால் “பொதுநிலைக் கழகம்” என்று பெயர் மாற்றினார்.
அறிவுரைக் கொத்து, அறிவுரைக் கோவை, கருத்தோவியம், சிறுவற்கான செந்தமிழ், இளைஞர்க்கான இன்றமிழ் என 54 நூல்களை எழுதியுள்ளார். திருமுருகன் அச்சக்கூடம் என ஒன்றை உருவாக்கி தனித்தமிழ் நூல்களை அச்சிட்டார்.
அவர் பல்லாவர முனிவர் என்றே அன்றைய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்டார் மறைமலை.
தனித் தமிழையும், சைவ சித்தாந்தத்தையும் இரு கண்களாக நேசித்த மறைமலை அடிகள், தனது பிள்ளைகளுக்குக் கூட, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம் என்று சைவ சித்தாந்த பெயர்களை வைத்தும், அவற்றை பின்னர் அறிவுத்தொடர்பு, மணிமொழி என்று தனித்தமிழ் ஆக்கி மகிழ்ந்தார்.
தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், மொழியியல் அறிஞர், தனித்தமிழ் இயக்கத்தின் அடிவேர் என்றெல்லாம் பல முகங்களுடன் இன்றும் தனித்தமிழ் சொற்கள் வழி நிலையான புகழ் கொண்ட மறைமலை அடிகளின் நினைவாகவே, சென்னை புறநகர் பகுதி ஒன்றுக்கு மறைமலை நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக விவேக்பாரதி