ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட் நடமாட்டங்களைக் கண்காணிக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றங்களைத் தடுத்திடும் வகையில் அடுத்த மாதம் முதல் ஈரோட்டிலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் தலா 4 காவலர்கள் இரண்டு சக்கர வாகனங்களில் நடமாடும் கண்காணிப்புக் கேமராவுடன் தங்களது தோள்களில் மாட்டியபடி கண்காணிப்புப் பணியை தொடர்வார்கள் என்றும், GPRS மூலம் மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் இருந்து அதனை பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். மாநகரத்தில் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுத்திடும் வகையில் முக்கிய பகுதிகளில் இதுவரை 600 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் கூறினார்.