சென்னையில் பல்வேறு இடங்களில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், மாணவர்கள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
திமுக என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மின்வெட்டு, திமுக வந்தாலே மின்வெட்டு பிரச்னை வந்துவிடும் என்று பலரும் சொல்வதுண்டு. ஏனென்றால் கடந்தகால திமுக ஆட்சியின் நிர்வாகத்திறனுக்கு கிடைத்த சான்று அது.
தற்போது மீண்டும் அதை கண்கூடாக காணும் விதமாக, சென்னையில் பல இடங்களில் நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறைக்கு மேல் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக பலரும் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழலில், மின் தடை மிகுந்த சிரமத்தை அளித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நள்ளிரவில் நான்கைந்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், தூங்க முடியாமல் குழந்தைகளுடன் காற்று வாங்க தெருவில் நிற்பதாக புலம்புகின்றனர்.
கொரோனாவால், மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர். தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டால், தங்களது படிப்பு பாதிக்கப்படுவதாக மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வீடுகளில் இருந்து லேப்டாப் மூலம் வேலை செய்யும் ஐ.டி. ஊழியர்களும் மின்வெட்டு பிரச்னையில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
அதிமுக ஆட்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு இருந்து வந்தது.
தமிழ்நாட்டின் மின் தேவையை திறம்பட கையாண்டதாக அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு, மத்திய அரசும் பாராட்டு தெரிவித்தது.
ஆனால் திமுக ஆட்சியில் ஊரடங்கு காலத்திலேயே மின்வெட்டு ஏற்படுகிறது என்றால், தொழில்துறைகள் முழுமையாக இயங்கத் தொடங்கினால், நிலைமை என்ன ஆகுமோ என்ற பேரச்சம் மக்கள் மனதில் வேரூன்றியுள்ளது.
நியூஸ் ஜெ. செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் யோசேப்புடன் செய்தியாளர் கோபாலகிருஷ்ணன்…