கருப்பு பூஞ்சை பாதிப்பால் பலர் உயிரிழப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோய்க்கு போதுமான மருந்து கையிருப்பு இல்லை என அரசு தெரிவித்துவரும் நிலையில், மேலும் இருவர் உயிரிழந்த நிகழ்வு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இதன் காரணமாக, கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நோய் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் ஆம்போடெரிசின்-பி (Amphotericin-B) மருந்து போதுமான அளவு கையிருப்பு இல்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கொரோனா தொற்று ஏற்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர், கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை பாதிப்பு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த, தொழிலதிபர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதியானது.

இதையடுத்து, மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கருப்பு பூஞ்சை பாதிப்பால் பலர் உயிரிழப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version