அதிர்ஷ்டம் மட்டுமே தமிழ் சினிமாவில் ஒருவர் நீடித்து இருக்க காரணமாக அமைந்துவிடாது. காலத்துக்கும் பேசக்கூடிய படங்கள் கொடுப்பவர்கள் ஒரு ரகம் என்றால், காலத்திற்கு ஏற்ற மாறி பேச கூடிய படங்கள் கொடுப்பவர்கள் மறுரகம். அதில் முன்மாதிரி இயக்குநர் மணிரத்னம். இன்றளவும் தன்னை ஒரு ட்ரெண்ட் செட்டராகவே கொண்டு மற்றவர்களுக்கு ரோல்மாடலாக இருப்பவருக்கு இன்று பிறந்தநாள்.
மணிரத்னம் என்று குறிப்பிட்டால் உடனடியாக நியாபகம் வருவது அவரது வசனங்கள் தான். நீளமாக பேசிதான் காட்சியை விளக்க வேண்டும் என்றில்லை. சின்ன சின்ன வசனங்கள் தான் அவரின் பிளஸ். 80களில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் படமெடுக்க வந்தவரை இன்று தமிழ் திரையுலகம் தூக்கி வைத்து கொண்டாடுகிறது என்றால் சும்மாவா….!
கன்னடம், மலையாளம், தமிழ் மொழிகளில் அவர் இயக்கிய முதல் 4 படங்கள்ம் எதுவும் வெற்றியடையவில்லை . 5வது படமாக அமைந்தது ‘மௌனராகம்’. அதன் வெற்றி அதுதான் அவரின் இருப்பை உறுதிப்படுத்தியது. அவருடைய படங்கள் இன்றளவும் பேசப்பட காரணம் காட்சி அமைப்புகளும், கதாப்பாத்திர வார்ப்புகளும். நிச்சயம் வெவ்வேறு கதை சொல்லாடல் இருக்கும். அவருடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் அகிரா குரோசாவா. இவரது படங்களில் அவரை பின்பற்றியே காட்சிகள் வழியே கதை சொல்லியிருப்பார்.
1987ல் கமலை வைத்து இயக்கிய ‘நாயகன்’ படம் அவரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக மாற்றியது. அடுத்ததாக ஆட்டிஸம் குழந்தையை மையபடுத்திய ‘அஞ்சலி’ படமும் சரி, இரண்டு ஹீரோக்களை கொண்ட ‘ அக்னி நட்சத்திரம்’ படமும் சரி மிகச்சிறந்த இயக்குநர் என்பதை நிரூபித்தது.
மணியின் படத்தில் கலாச்சார காதல்,ரயில், மழை, கண்ணாடி,பஸ் டிராவல் வழியே காட்சியை நகர்த்துவது போன்ற சீன்கள் எப்போதும் இருப்பவை. அஞ்சலிக்கு பிறகு சூப்பர் ஸ்டார்களான ரஜினி, மம்முட்டி வைத்து மகாபாரத கதையின் கேரக்டர்களை கொண்டு உருவான ‘தளபதி’யின் காட்சிகள் இன்றும் ரசிகர்களின் அபிமானத்திற்குரியது. இங்கு ஒரு விஷயம் சொல்லவேண்டுமென்றால், தளபதி வரை அவரின் படங்களுக்கு இசை ‘இளையராஜா’. இவர் காட்சிமொழியை திரையில் பயன்படுத்த அதற்கு பின்னணியில் உணர்வுகளின் இசையை கொடுத்திருப்பார் அந்த இசையின் ஞானி. ஆனால் அதன்பின் அவர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடு தமிழ் சினிமாவில் மற்றொரு இசை வடிவத்தை உலகறிய வைத்தது. அடுத்த படமான ‘ரோஜா’வில் ‘ஏ.ஆர்.ரஹ்மான்’-ஐ அறிமுகப்படுத்தினார். ‘ரோஜா’வில் இனவாத அரசியல், ‘பம்பாய்’ படத்தில் மதம் சார்ந்த அரசியல், உயிரே ‘தீவிரவாத அரசியல்’, திராவிட அரசியல் பேசிய ‘இருவர்’, ஈழத்தை மையமாக கொண்ட ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, இளைஞர்களின் அரசியல் பேசிய ‘ஆய்த எழுத்து’, ‘லிவ்விங் டூ கெதர்’ வாழ்க்கையை மையப்படுத்திய ‘ஓகே கண்மணி’ என சர்ச்சைகளுக்குள் ஐக்கியமானார் மணிரத்னம். ஆனால் படங்கள் வெற்றியடையும். காரணம் கதைக்களங்கள் அன்று நிலவும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் அல்லது கலாச்சார பதிவுகளை வெளிப்படுத்தியிருக்கும்.
அவரின் பலப்படங்களில் நடித்தவர் நடிகர் அரவிந்த்சாமி. அதேபோல் தனது அண்ணனின் ஜிவி பிலிம்ஸ், தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் தாண்டி பிற நிறுவனங்களுக்கு படம் இயக்காதவர். கடைசியாக கடந்த வருடம் மல்டி ஸ்டார் ஹீரோக்களை வைத்து ‘செக்க சிவந்த வானம்’ படம் கொடுத்து பிரமிக்க வைத்தார். அவரின் இந்த டெடிகேஷன் நிச்சயம் ஆச்சர்யம் தான்.
தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள், பத்ம ஸ்ரீ விருதுகளும் வென்றுள்ளார் மணிரத்னம்.
‘மகாபாரதம்’ தளபதி என்றால், ‘இராமாயணம்’ ராவணனாக உருவெடுத்தது. அடுத்தாக இயக்கப்போகும் தமிழ் திரையுலகில் பல பேர் முயன்று எடுக்கமுடியாமல் போன ‘பொன்னியின் செல்வன்’ என வரலாற்றையும் விட்டுவைக்காதவர்.
சொல்லப்போனால் அவரின் படங்கள் எல்லாம் உண்மைக்கு அப்பாற்பட்டவையே. ஆனால் காலம் நம்மை அதனுள் பொருத்திப் பார்க்க வைக்கும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மணி சார்…!