வறட்சி பாதித்த பகுதிகளில் தமிழக அரசின் நீர் மேலாண்மை திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்து மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது தேனி மாவட்டம். ஆட்சியரின் நடவடிக்கை பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பை காணலாம்….
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதி தேனி மாவட்டம். முல்லைப் பெரியாறு, வைகை ஆறு, வராக நதி என எண்ணற்ற ஆறுகளும் முல்லைப் பெரியார் அணை, வைகை அணை, மஞ்சளாறு அணை உள்ளிட்ட எண்ணற்ற நீராதாரங்களையும் கொண்ட மாவட்டமாக இது உள்ளது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக இந்த மாவட்டம் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்தது.
பருவமழை பொய்த்தன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்த நிலையில் ஒட்டுமொத்த மாவட்டமும் குடிநீர் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இச்சூழ்நிலையை சமயோஜிதமாக கையாண்டு அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்.
குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயத்தை முன்னரே உணர்ந்து அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரும் எண்ணத்துடன் விவசாயிகள் அனைவரும், தங்களது நிலங்களுக்குத் தேவையான மண்ணை குளங்களில் இருந்து எடுத்துச் செல்லலாம் என்று ஒரு உத்தரவை கடந்தாண்டு பிறப்பித்தார். இதன்மூலம் மாவட்டத்தில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட கண்மாய்கள் அரசின் செலவில்லாமல் பொதுமக்களால் தூர்வாரப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் எடுத்த இந்த நடவடிக்கை காரணமாக 132 என்ற அளவில் இருந்த விவசாயிகளின் பண்ணை குட்டைகள், 6 மடங்காக உயர்ந்து அதன் எண்ணிக்கை 792 ஐ தொட்டுள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு பெய்த மழை நீர் அனைத்தும் பண்ணைக்குட்டைகளில் சேகரிக்கப்பட்டு விவசாயிகளின் கிணறுகளிலும் ஆழ்துளைக் கிணறுகளிலும் பெருகத் தொடங்கியது. இதனால் குடிநீர் பற்றாக்குறை தீர்ந்ததுடன் விவசாயமும் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.
கால்வாய்களை தூர்வாருதல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கைகளால் சுமார் 175 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு அவை நீர்நிலைகளாக மாற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத கிணறுகளை மீட்டு எடுத்து அவற்றை செறிவூட்டி சுத்தப்படுத்தி குடிநீர் கிணறுகளாக மாற்றியுள்ளார்.
தமிழக அரசின் நீர் மேலாண்மைத் திட்டத்தில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மூலமாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாயத்திற்குத் தேவையான நீருக்கு பற்றாக்குறை ஏற்படாத சூழல் உருவாகியுள்ளது. அத்தியாவசியப் பொருளான தண்ணீர் இப்போது தாராளமாய் கிடைப்பதால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக புரளிகளை கட்டவிழ்த்துவிட்ட கயவர்களுக்கு தமிழக அரசின் உதவியோடு தன்னுடைய நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைகளால் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பதிலடி கொடுத்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.