பாலியல் வழக்குகளில் 21 நாட்களில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 21 நாட்களுக்குள் விசாரணை செய்து குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அளிக்கும் வகையிலான சட்ட மசோதாவை நிறைவேற்ற ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குண்டூர் மாவட்டம், வெலகம்புடியில் உள்ள தற்காலிக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆந்திர மாநில கிரிமினல் சட்டம் – 2019 என்ற வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால், 14 நாட்களில் விசாரணை செய்து 21 நாட்களில் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, அதில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்த அமைச்சரவை தீர்மானத்தை வைத்து சட்டப் பேரவை விவாதத்திற்கு பிறகு புதிய சட்ட மசோதா நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர முதலமைச்சரின் இத்தகைய மசோதாவிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Exit mobile version