3 மாதங்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!

சென்னை அயனாவரத்தில் தாயுடன் ஏற்பட்ட மனவருத்தத்தில் வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுமிக்கு அடைக்கலம் தருவதாக கூறி திருத்தணி அழைத்து சென்று 3 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த நபரை, ஆந்திர மாநிலத்தில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்…

சென்னை அயனாவரத்தில் கடந்த மாதம் 20ம் தேதி தமது பாட்டியுடன் சண்டையிட்ட சிறுமி ஒருவர், வீட்டை விட்டு வெளியேறி எங்கு போவது என தெரியாமல் பெரம்பூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்த திருத்தணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர், பேச்சு கொடுத்து அடைக்கலம் தருவதாக கூறி திருத்தணியில் உள்ள தமது வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, சிறுமியை வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வெங்கடேசன் தமது தாயிடம் தச்சு வேலைக்காக அழைத்து வந்துள்ளதாக கூறி வீட்டிலேயே தங்க வைத்துள்ளார்.

கிட்டதட்ட 3 மாதங்களுக்கும் மேலாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிலையில், தச்சு வேலைக்காக வெங்கடேசன் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிற்கு சென்றதை அறிந்த வெங்கடேசனின் தாய், சிறுமியிடம் சொந்த ஊருக்கு செல்லுமாறு கூறி அங்கிருந்து தப்ப வைத்துள்ளார். இதையடுத்து, திருத்தணி ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுமியை, அப்பகுதியை சேர்ந்தவர்கள் அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் நிலையத்தில் சிறுமி தமக்கு நேர்ந்த கொடுமைகளை காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், வெங்கடேசனை பிடிக்க காவல் ஆய்வாளர் தேவிகா தலைமையில் தனிப்படையினர் ரேணிகுண்டா விரைந்தனர். அங்கு, தச்சு வேலைக்காக சென்ற வெங்கடேசனை 5 மணிநேரம் காத்திருந்து கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். வெங்கடேஷனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு அடைக்கலம் தருவதாக கூறி அழைத்து வந்து மூன்று மாதமாக பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார். கைது செய்யப்பட்ட வெங்கடேசன் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியை 5 மணிநேரம் காத்திருந்து, பிடித்து சிறையில் அடைத்த காவல்துறையினரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

மூன்று மாதங்களாக காணமல் போன சிறுமியின் நிலை குறித்து கண்டுக் கொள்ளாத அவரது பெற்றோர், மூன்று மாதம் கழித்தே புகார் அளித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. பெண்கள் பாதுகாப்பில் அரசும், காவல்துறையினரும் கவனம் செலுத்தி வரும் நிலையில் பெற்றோர்களும் தமது குழந்தைகளை பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Exit mobile version