குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்ததாகக் கூறிச் திருச்சியைச் சேர்ந்த ஒருவர் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்த அறிக்கையில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை அதிகமாகப் பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் இருப்பதாகக் கூறியிருந்தது. இந்த அறிக்கை தமிழக காவல்துறையினருக்கு அனுப்பப்பட்ட நிலையில், இது போன்ற குற்றங்களைத் தடுக்க, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தலைமையில் ஒரு குழு ஆய்வு நடத்தியது. அதன் படி, தமிழகத்தில் முதன்முறையாகத் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்ததாகவும், இணையத் தளத்தில் பதிவு செய்ததாகவும் கூறிக் கைது செய்யப்பட்டார். ஏசி மெக்கானிக்காகப் பணிபுரிந்து வரும் கிறிஸ்டோபர், முகநூலில் நிலவன், ஆதவன் உள்ளிட்ட 3 பொய்யான பெயர்களைக் கொண்டு இணையத்தளத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களைப் பதிவிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபரைத் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து கிறிஸ்டோபரைத் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.