ஈரோட்டில் தோஷம் கழிப்பதாக கூறி 6 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான யோகநாதனின் மகளுக்கு தோஷம் கழிப்பதாக கூறி, அதேப் பகுதியை சேர்ந்த முகமது ரபிக், அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
யோகநாதன் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்ற முகமது ரபிக், தான் வைத்திருந்த ரசாயனம் கலந்த விபூதியை யோகநாதனின் மனைவி மற்றும் மகளிடம் கொடுத்து, அதில் தண்ணீரை ஊற்றுமாறு கூறியுள்ளார்.
அப்போது அந்த ரசாயணம் கலந்த விபூதி சிவப்பு நிறமாக மாறியதை அடுத்து, மகளுக்கு இருந்த தோஷம் கழிந்து விட்டது எனக் கூறி, 6 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு அங்கிருந்த செல்ல முயன்றுள்ளார்.
அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த யோகநாதன் சுதாரித்துக் கொண்டு முகமது ரபிக்கை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் யோகநாதனின் மனைவியிடம் மகளுக்கு தோஷம் கழிப்பதற்கு 12 ஆயிரம் ரூபாய் கேட்டதும், இறுதியில் 6 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டதும் தெரியவந்தது.