மேற்கு வங்கத்தில் புயல் சேதங்கள் குறித்து அறிய தொடர்பு கொண்ட போது, தனது ஈகோவால் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தன்னிடம் பேசுவதை தவிர்த்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை தேர்தலையொட்டி மேற்குவங்க மாநிலம் பங்குராவில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேசிய ஒருமைப்பாட்டை மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவமதித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவின் பிரதமரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத மம்தா பானர்ஜி, பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானை கௌரவிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுகிறார். முன்பு வங்கதேசத்தை அவமதித்து வந்த மம்தா, தற்போது பெருமை பேசி வருவதாக குறிப்பிட்ட அவர், இந்த முரண்பாடு ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
சமீபத்தில் மேற்குவங்கத்தில் புயல் தாக்கியபோது, தான் மம்தாவை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்ததாகவும், ஆனால் ஈகோ காரணமாக அவர் தனது அழைப்பை ஏற்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். நெருக்கடியான அந்த நேரத்தில் பிரதமருடன் ஆலோசனை மேற்கொள்வதன் அவசியத்தை அவர் உணரவில்லை என்ற கூறிய மோடி, மேற்குவங்க அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதையும் அவர் தடுத்ததாக தெரிவித்தார்.
முன்னதாக பங்குராவின் சிறப்பு விமானநிலையத்தில் மக்கள் தனக்களித்த சிறப்பான வரவேற்பிற்கும் மக்களின் அன்பிற்கும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.