மலையாள சினிமாவை மாற்றிய மம்முட்டி!

முகமது குட்டி பனபரம்பில் இஸ்மாயில் என்ற இயற்பெயர் கொண்ட வழக்கறிஞர் ஒருவர் எப்படி மம்முட்டி என்ற நடிகர் ஆனார் என்கிற பயணம் அவ்வளவு சிறியது அல்ல. நாடகத் தன்மையோடு நகர்ந்த மலையாள சினிமாவை, தன் வசீகர சிரிப்பு, யதார்த்தம் மீறாத நடிப்பு, கம்பீர தோற்றப் பொலிவோடு கூடிய அசாத்திய ஸ்டைலை கொண்டு மாற்றிய பெருமை மம்முட்டியை சேரும்.

1971-ல் “அனுபவங்கள் பாலிச்சகள்” படம் மூலம் துணை நடிகராக தோன்றிய மம்முட்டிக்கு, உடனே எந்த கதவும் திறந்துவிடவில்லை. கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் போராடிய அவருக்கு 1980-ல் “வில்கானுண்டு ஸ்வப்நங்கல்” படத்தில் சொல்லும்படியான அறிமுகம் கிடைத்தது. அதே ஆண்டிலேயே மேளா படமும், அட யார் இவர் என்று திரும்பி பார்க்க வைத்தது.1982-ல் யவனிகா படம் அவரை சிறந்த நடிகராகவும், வசூல் மன்னனாகவும் அடையாளம் காட்டியது.

1982 முதல் 1986 வரை அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 150-ஐ தாண்டும். மலையாளம் மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் நடிக்கத் தொடங்கி அதிலும் தனது முத்திரையை பதித்தவர் மம்முட்டி. தமிழில் மெளனம் சம்மதம், அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, மறுமலர்ச்சி, ஆனந்தம் என நடிப்பில் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களையும் கவரத் தவறவில்லை.

மம்முட்டியின் துப்பறியும் படங்களுக்கு ஒரு தனி வரவேற்பே இருந்தது அக்காலத்தில், அதற்கு “ஒரு சிபிஐ டைரி குறிப்பு” படம் உதாரணம். அவரின் நியு டெல்ஹி, அமரம், பொந்தன் மாடா, மதிலுகல், ஒரு வடக்கன் வீரகதா, பூத கண்ணாடி, டாக்டர். பாபா சாகேப் அம்பேத்கர், பேரன்பு போன்ற படங்கள் அவரின் யதார்த்தமான நடிப்புக்கு தேசிய, மாநில விருதுகளை அள்ளித் தந்தது. மோகன்லாலுடன் இணைந்து 56 படங்களில் நடித்துள்ளார் மம்முட்டி.

காலத்துக்கேற்ப கமர்சியல் படங்களில் ஒருபுறம் நடித்தாலும், பழஸி ராஜா, மாமங்கம் போன்ற சரித்திர படங்களில் நடித்து ரசிகர்களை அசரடித்தார் மம்முட்டி. 80’s, 90’s தொடங்கி 2020-வரை திரைவடிவமும் சரி, அடுத்த தலைமுறை நடிகர்களும் சரி, மாறிக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு கலைஞன் மட்டும் நிலையாகவே நிற்கிறார், மலையாள சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் “மெகா ஸ்டார் மம்முட்டியாக”.

 

Exit mobile version