மேற்கு வங்க முதலமைச்சராக மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார்.
கொரோனா பரவல் காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது.
முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவியேற்றார்.
அவருக்கு ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவி பிராமணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பின்னர், விழாவில் பேசிய மம்தா பானர்ஜி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதே தன்னுடைய முதல் பணியாக இருக்கும் என தெரிவித்தார்.
கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக உயர்மட்ட குழுவினருடன் ஆலோசிக்க உள்ளதாக கூறிய அவர், தன்னுடைய இரண்டாவது கடமையாக மாநிலத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவது என தெரிவித்தார்.
வன்முறைகளை கைவிடுமாறு அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும், நிலைமையைக் கையாள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
வன்முறைகளை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி எச்சரித்தார்.
இந்த விழாவில் மம்தாவை தவிர அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. சிறப்பு விருந்தினராக சவுரவ் கங்குலிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.