உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாறுகிறது மாமல்லபுரம்

மத்திய அரசின் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களாக மாற்றும் திட்டத்தில், தமிழ்நாட்டின் மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஊக்குவிப்பதற்காக 17 முக்கிய இடங்களை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களாக உருவாக்கும் திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.

அதில், மண்டபங்கள், சிற்பங்கள், குடவரை கோயில்கள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்து வரும் தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரமும் இடம் பிடித்துள்ளது. மேலும், இத்திட்டத்தில், தாஜ்மஹால், பதேபூர் சிக்ரி, கேரளாவில் உள்ள குமரகம், மராட்டிய மாநிலத்தில் உள்ள அஜந்தா, எல்லோரா, டெல்லியில் உள்ள செங்கோட்டை, ஹுமாயுன் கல்லறை, குதுப்மினார், கோவாவில் உள்ள கோல்வா, கர்நாடகத்தில் உள்ள ஹம்பி, ராஜஸ்தானில் உள்ள அமீர்கோட்டை, குஜராத்தில் உள்ள சோம்நாத், கோலிவிரா, மத்தியபிரதேசத்தில் உள்ள கஜுராகோ, அசாமில் உள்ள கஜிரங்கா, பீகாரில் உள்ள மகா போதி கோவில் ஆகிய 17 இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கைவினைத் தொழிலை மேம்படுத்தி வேலைவாய்ப்பை பெருக்கும் திட்டத்தையும் மத்திய அரசு மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version