இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, மலேசியாவில் அரசியல் தஞ்சம் அடைந்த ஜாகிர் நாயக்கின் மதப் பிரசாரத்திற்கு, மலேசியாவும் தற்போது தடை விதித்துள்ளது. யார் இந்த ஜாஹிர் நாயக் ? ஏன் இத்தனை சர்ச்சைகள் ? – விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு
சர்ச்சைக்குரிய மத போதகரான ஜாகிர் நாயக் மும்பையில் 1965ஆம் ஆண்டில் பிறந்தவர். மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். இவர் 1991ல் ஐ.அர்.எஃப் எனப்படும் இசுலாமிய ஆராய்ச்சி நிறுவனத்தை ஆரம்பித்தார். பீஸ் டிவி என்ற தொலைக்காட்சியையும் தொடங்கினார்.
மதப் பிரசாரத்துக்காக பீஸ் போன் எனப்படும் ஆண்ட்ராய்டு மொபைலைக் கூட உருவாக்கினார். இந்தியா தவிர உலகின் பல்வேறு நாடுகளிலும் அவர் மதப் பிரசாரங்களில் ஈடுபட்டார். திருக்குர்-ஆன் மட்டுமின்றி இந்துமதத்தின் நான்கு வேதங்கள், ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றையும், கிறிஸ்தவர்களின் பைபிளையும் சரளமாக மேற்கோள் காட்டும் இவரது பேச்சால் உலகம் முழுவதும் இவர் கவனிக்கப்பட்டார்.
ஆனால் ஜாஹிர் நாயக்கின் கருத்துகள் அடிக்கடி சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வந்தன. இந்தியாவில் இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி ஆட்சி நடக்க வேண்டும் என்று அவர் பேசியதும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறியதும், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் புத்தர் சிலைகளை உடைத்ததை இவர் நியாயப்படுத்தியதும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின.
இசை என்பது போதைக்குச் சமமானது, திருடுபவனின் கைகளை வெட்டுவதே சிறந்த தண்டனை, மனைவியை அடிக்க கணவனுக்கு எப்போதும் அதிகாரம் உண்டு என்று இவர் தொடர்ந்து பேசி வந்தார். பேச்சால் சர்ச்சைகள் குவிந்த அதே நேரம் இவருக்கு ஆதரவும் பெருகியது. முகநூலில் இவரை லைக் செய்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சம் – என்பது ஒரு உதாரணம்.
2016ல் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, ‘இசுலாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக வேண்டும்’ என இவர் பேசியது பெரிய சர்ச்சையானது. இதனால் வங்கதேசத்தில் ஒளிபரப்பாகி வந்த ஜாகிர் நாயக்கின் பீஸ் தொலைக்காட்சிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.
ஜாகிர்நாயக்கின் கருத்துகள் மக்களிடையே பிரிவினையைத் தூண்டுவதாக உள்ளன என்று கூறி, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் அவருக்கு அடுத்தடுத்து தடைகளை விதித்தன. பின்னர் வங்கதேசத்தின் உணவகம் ஒன்றில் தாக்குதல் நடத்தி 22 பேரைக் கொன்ற ஒரு பயங்கரவாதி ஜாகிர்நாயக்கின் கருத்துகளை தனது முகநூலில் பதிவு செய்திருந்ததால் அவருக்கு எதிர்ப்பு இன்னும் வலுத்தது. அதனால் சுற்றுப்பயணத்தில் இருந்த ஜாஹிர் நாயக், 2016ஆம் ஆண்டில் இந்தியா திரும்பாமலேயே மலேசியாவில் நிரந்தரமாகக் குடியேறினார்.
ஜாஹிர் நாயக் மீது பல்வேறு பணமோசடி வழக்குகளும் உள்ளதால், இந்திய அரசு, ஜாஹிர் நாயக்கை தங்களிடம் ஒப்படைக்கும்படி, 2018ல் மலேசிய அரசிடம் கோரியது. அதற்கு மலேசிய அரசு மறுப்பு தெரிவித்தது. கடந்த 2 ஆண்டுகளாக ஜாகிர் நாயக்கால் எந்த பிரச்னையும் ஏற்படாத நிலையில், அவரை நாடுகடத்த அவசியமில்லை எனவும், அவருக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் மலேசிய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இப்போது மீண்டும் தனது சர்ச்சைப் பேச்சை ஜாஹிர் நாயக் மலேசியாவில் தொடங்கி உள்ளார். மலேசியாவில் உள்ள இந்துக்கள் மலேசிய பிரதமருக்கு விசுவாசமாக இல்லை – என்ற இவர் சமீபத்தில் பேசிய சர்ச்சைக் கருத்தால், அவர் கடும் கண்டனங்களுக்கு ஆளானார்.
அவர் நாடுகடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மலேசியாவில் வலுத்தன. அப்போது ’நான்இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால், மலேசியாவை பூர்வீகமாகக் கொண்டிராத சீனர்களும் இங்கிருந்து வெளியேற வேண்டும்’ – என்று ஜாகிர் நாயக் கூற, அதனால் அவருக்கு எதிரான போராட்டங்கள் மலேசியாவில் தீவிரமடைந்தன.
மலேசியாவில் ஜாகிர் நாயக் மதப் பிரசாரம் செய்ய தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீண்டும் சர்ச்சைப் பேச்சைத் தொடர்ந்தால், அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படவே வாய்ப்புகள் உள்ளன.