தைப்பூசத்தையொட்டி மலேசியாவில் உள்ள பிரசித்தி பெற்ற பத்துமலை முருகன் கோயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூச திருவிழா தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மலேசியாவின் பினாங்கு நகரில் உள்ள தண்ணீர் மலை உட்பட பல்வேறு முருகன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேலும் பால்குடம் சுமந்தும், காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து முருகப்பெருமானுக்கு நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், உலக புகழ் பெற்ற பத்துமலை முருகன் கோயிலிலும் தைப்பூச திருவிழா களைகட்டியது. தைப்பூசத்தை முன்னிட்டு கோலாலம்பூர் ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் இருந்து கடந்த வியாழக்கிழமை புறப்பட்ட வெள்ளி ரதம், நேற்று மாலை பத்துமலை முருகன் கோயிலை வந்தடைந்தது. ரதத்தை பின்தொடர்ந்து பால்குடம் ஏந்தி வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.