மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளியான திரிஷ்யம் திரைப்படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த படம் “திரிஷ்யம்”. ரசிகர்களை கவர்ந்த இப்படத்தின் திரைக்கதையினால் கேரளாவில் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம், சிங்கள மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. தமிழிலும் கமல் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்தது.
இந்நிலையில் திரிஷ்யம் திரைப்படம் சீன மொழியில் ‘எ ஷீப் வித்தவுட் எ ஷெப்பர்டு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் சீன நடிகர்கள் யாங் சியோ, சுஹோ டன், ஜோன் சென் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியாகிறது. இதனால் மலையாள திரையுலகம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.