பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் தயாரிக்கும் பணி, மதுரையை அடுத்த குமாரகம் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சர்க்கரை பொங்கல் இல்லாமல் பொங்கல் பண்டிகை கிடையாது. இதற்கு தேவையான வெல்லம் தயார் செய்யும் பணி மதுரை குமாரகம் பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரும்பு பிழியும் எந்திரம் மூலம் சாறெடுத்து ஒரு பெரிய இரும்பு சட்டியில் அந்த சாறை ஊற்றி கொதிக்க விடுகின்றனர்.
கரும்பு சாறு கொதித்து வரும்போது அதிலுள்ள அழுக்குகளை அகற்றி, மரப் பெட்டியில் ஊற்றி ஆற வைத்து, அவற்றை உருண்டைகளாக உருட்டி வெல்லக்கட்டிகளை தயார் செய்கின்றனர். இந்த வெல்லக்கட்டிகள் பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. 500 லிட்டர் கரும்புச் சாறில் இருந்து சுமார் 125 கிலோ வெல்லம் எடுக்கின்றனர்.