நாடு முழுவதும் 112 மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தனியார் மற்று அரசு பங்களிப்புடன் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார கட்டமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 2025ஆம் ஆண்டிற்குள் நாட்டில் காச நோயை முற்றிலும் ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டு, சிறந்த கல்வியை வழங்கும் வகையில், நேரடி முதலீடு, வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கல்வித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. வெளிநாட்டு மாணவர்கள் ஈர்க்கும் வகையில், “இந்தியாவில் கல்விக் கற்க வாருங்கள்” என்கிற திட்டம் ஆசிய, ஆப்பிரிக்கா நாடுகளில் பிரபலப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்கவும் திட்டம் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில் முனைவோர்களின் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட இருக்கிறது. நாட்டின் உற்பத்தியை பெருக்கும் வகையில், தேசிய தொழில்நுட்ப ரீதியிலான ஜவுளி இயக்கம் உருவாக்கப்பட இருக்கிறது. கட்டமைப்பு துறைக்கு 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 5 புதிய பொலிவுறு நகரங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி-மும்பை இடையே அதிவிரைவுச் சாலை 2023ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் துறைமுகங்களை மேம்படுத்தவும், முக்கிய துறைமுகம் ஒன்று நிறுவனமயமாக்க திட்டம் செய்யப்படும். மின்சாரத் துறைக்கு புதிய உத்வேகம் அளிக்க புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2023ஆம் ஆண்டிற்குள் ப்ரீ-பெய்டு டிஜிட்டல் மீட்டர் வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அனைத்து கிராமங்களுகு, ஃபைபர் நெட் வாயிலாக இணைய வசதி ஒரு லட்ச பஞ்சாயத்துகளில் ஏற்படுத்தப்படும். நாடு முழுவதும் உடான் திட்டத்தின் கீழ் புதிததாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பழைய அனல் மின் நிலையங்களுக்கு கட்டுபாடுகள் விதிக்கவும், அதிகளவு கரியமில வாயுவை வெளியேற்றினால் மூட நடவடிக்கையும் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றிலும் தடை விதிக்கப்படும்.
ஆதார் எண் அடிப்படையில் உடனடியாக பான் கார்டு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய எளிமைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை அமல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிலேயே உற்பத்தியாவதால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உபகரணங்களுக்கு சுங்கவரி அதிகரிக்கப்படும்.
இதுபோன்று முக்கிய சீர்த்திருத்தங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.