மத்திய பட்ஜெட் என்பது ஒவ்வொரு நிதியாண்டும் மத்திய அரசு அடுத்த நிதியாண்டிற்கு செய்யப்போகும் திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கான செலவுகள், கடந்தாண்டு செய்த செலவுகள், அதில் மீதம் இருக்கும் தொகை, அவரச தேவைக்காக செலவு செய்யப்பட்டவை என அனைத்து குறித்த அறிக்கையை வெளியிடுவதே பட்ஜெட் அறிவிப்பாகும்.
இந்தியாவில் முதல் பட்ஜெட்டை 1860-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி கிழக்கிந்திய கம்பெனி தான் அறிமுகம் செய்தது. பின் இந்திய நிதி கவுன்சிலின் உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் ஆலோசனையில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நவம்பர் 26-ம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சண்முகம் செட்டி.
1955ம் ஆண்டு வரை மத்திய பட்ஜெட் ஆங்கிலத்தில் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது.1955-56ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் முதல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்பட்டன.
இந்திய வரலாற்றில் அதிகபட்சமாக பட்ஜெட் தாக்கல் செய்தவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் மொராஜி தேசாய். அதற்கு அடுத்தப்படியாக ப.சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
லீப் வருடத்தில் பிப்ரவரி 29-ம் தேதி பிறந்த மொராஜ் தேசாய் 1964 மற்றும் 1968 என இரண்டு முறை தனது பிறந்தநாள் அன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண் நிதியமைச்சர் இந்திரா காந்தி. 1970-71ல் சில காலம் இந்திரா காந்தி நிதியமைச்சராக பதவி வகித்தார். அப்போதுதான் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
1973-74ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் கருப்பு பட்ஜெட் என அழைக்கப்பட்டது. ஏனென்றால் அந்த பட்ஜெட்டில் ரூ.550 கோடி அளவுக்கு அதிகமாக பட்ஜெட் பற்றாக்குறை இருந்தது. அந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ஒய்.பி.சவான்.
1999-ம் ஆண்டு வரை பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதனை யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணிக்கு மாற்றினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டில் 39 பத்திகளாக மட்டுமே பட்ஜெட் அறிக்கை இருந்தது. பின்னர் அது தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக 2014-ம் ஆண்டு அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கை 253 பத்திகளாக இருந்தது.
பின்னர் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் முதல் நாளே பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கினார் அருண் ஜெட்லி.
92 ஆண்டுகளாக தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட், கடந்த 2017ஆம் ஆண்டு பொது பட்ஜெட் உடன் சேர்க்கப்பட்டது.
ஒரு முழு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் மத்திய பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2019 ஜூலையில் 2019-20ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட் ஆவணங்கள் எப்போதும் சூட்கேசில் வைத்து மத்திய நிதியமைச்சர் கொண்டு வருவார். அந்த பாரம்பரியத்துக்கு சென்ற ஆண்டு நிர்மலா சீதாராமன் விடை கொடுத்தார். சென்ற ஆண்டு மத்திய பட்ஜெட்டை ஆவணங்களை சிவப்பு கலர் துணிப்பையில் நிர்மலா சீதாராமன் கொண்டு வந்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு அல்வா கிண்டும் விழா நடைபெறும். அதன் பின்பு தான் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் அச்சிடப்படும். அல்வா கிண்டிய பிறகு ரகசியம் காக்கும் நோக்கத்தில் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட யாரும் வீட்டிற்கு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.