பிரதமர் நரேந்திர மோடியைத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று சந்தித்துசந்தித்துப் பேசினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவம் தவறிப் பெய்த மழையால் வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த மாநிலத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தினர். இதையடுத்து வேளாண் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 8 ஆயிரம் ரூபாயும், தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 18ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என ஆளுநர் பகத்சிங் கோசியாரி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் விவசாயிகள் பிரச்சனை குறித்துத் தேசியவாதக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு 40 நிமிடங்கள் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது மகாராஷ்டிராவில் பருவம் தவறிப் பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்தது குறித்த புள்ளி விவரங்கள், அதை ஈடு செய்ய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுப் பிரதமரிடம் சரத்பவார் வழங்கியுள்ளார்.