மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நக்சல் பாதிப்புள்ள மாவட்டங்களில் மத்தியப் பாதுகாப்பு படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த மாநிலத்தில், பாஜக – சிவசேனா கூட்டணிக்கும், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தேவேந்திர ஃபட்நவிஸை முதலமைச்சராக கொண்டு ஆட்சி செய்து வரும் பாஜக, அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிர பிரசார உத்திகளை கையாண்டது.
அதே போன்று, ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஹரியானாவில் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தள், ஜனநாயக ஜனதாக் கட்சி ஆகியவற்றின் இடையே நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.