பாடுபொருள் எத்தனை தீவிரம் கொண்டதாக இருந்தாலும், அதனைப் பாமரருக்கும் கடத்திவிடலாம் என்பதை தனது கவிதைகள் மூலம் நிரூபித்துக் காட்டியவர் மகாகவி பாரதியார். இந்திய சுதந்திர தாகத்தை தனது கவிதைகளால் உரமேற்றிய பாரதி.
1882 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த பாரதி, வாழ்ந்த மொத்த நாட்கள் 39 ஆண்டுகள் தான். இதில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் குறைவான அவருடைய பொது வாழ்க்கையில், நவீனத் தமிழுக்கு வடிவம் கொடுத்து, கவிதையிலும் உரைநடையிலும் தமிழை புதிய திசைக்குத் திருப்பிய பெருமை பாரதியை மட்டுமே சேரும்.
கவிஞர், உரைநடை எழுத்தாளர், பத்திரிகையாளர், கார்ட்டூனிஸ்ட் என இளம் வயதிலேயே பன்முக ஆற்றலை வெளிப்படுத்திய மகாகவி பாரதி, சுதந்திர போராட்டம் வீறு கொண்டிருந்த காலகட்டத்தில், தமது பாடல்களால் மக்களிடையே தேசபக்தியை ஊட்டினார்.
பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, பாப்பா பாட்டு, சின்னஞ்சிறு கிளியே, புதிய ஆத்திசூடி, ஞான ரதம் என பாரதியின் மேலும் பல படைப்புகள், தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த வரங்கள் எனக் கூறலாம். இதனால் தான் பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டு நாட்டுடமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையது என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய தாய்நாட்டை நினைத்து பெருமைகொண்டதோடு மட்டுமின்றி, அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்பதை, தனது பல படைப்புகளில் எடுத்துக்காட்டியவர் பாரதி. யாருக்கும் புரியாதபடி செய்யுள்கள் இயற்றுவதே புலமையின் வெளிப்பாடு என்ற எண்ணம் வலுப்பட்டிருந்த காலத்தில், அதனை உடைத்து நொறுக்கி தமது எளிமையை முன்னிறுத்தியவர் பாரதி.
புதுக்கவிதையின் புலவனாகவும், பெண்ணுரிமைப் போராளியாகவும் பாரதிக்கு மேலும் பல முகங்கள் இருந்தன. பாரதி மறைந்தாலும் புரட்சிகரமான அவரது படைப்புகளால் என்றென்றும் அவர் இவ்வுலகில் நீக்கமற நிறைந்திருக்கிறார்.