தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவெடுத்துள்ளது. “மஹா” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலானது திருவனந்தபுரத்தில் இருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மஹா” புயல் மத்திய அரபிக் கடலை நோக்கி நகருவதால் தமிழகத்திற்கு நேரடி பாதிப்புகள் எதுவும் இல்லை என்றும் படிப்படியாக மழை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர்கள் முதல் 75 கிலோ மீட்டர்கள் வரை இருக்கும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.