திருவள்ளூர் அருகே போளிவாக்கத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலில் நடைபெற்ற நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரு தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமம், நவகிரகசாந்தி, லஷ்மி ஹோமம் உள்ளிட்டவையுடன் யாகசாலை பூஜை நடைபெற்றது. இதையடுத்து விமானகலச பிரதிஷ்டை, விக்ரகம் கண்திறப்பு உள்ளிட்டவையும் நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலை, விஷேச யாக பூஜையுடன் துவங்கி, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் மகாதேவ மலையைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ மகாநந்த சித்தர் சுவாமிகள் கலந்து கொண்டு, விமான கலசத்தில் புனித நீரை ஊற்ற கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து, பக்தர்கள் மீது கலசநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.